ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் தற்போதைய இந்திய அணி 1970களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை காட்டிலும் வலிமை மிக்கதாக உள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் வால்சன் தெரிவித்தார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்று அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வரும் 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது பல கோடிக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணியில் அங்கம் வகித்தவருமான சுனில் வால்சன் ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார்.
அவர், 1970களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிகளை காட்டிலும் தற்போதைய இந்திய அணி வலிமைமிக்கதாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவைப் பற்றி யார் சொல்ல வேண்டும் என்றும் வீரர்கள் அருமையாக செய்ல்பட்டு வருவதாகவும் ஆட்டம் மற்றும் செயல்திறன் அபாரமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
1975 மற்றும் 1979 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற சர் கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை காட்டிலும் தற்போதையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வலிமைமிக்கதாக உள்ளது என்று தெரிவித்தார். இந்திய வீரர்களின் ஆட்டத்திறன் மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களை வேறுபடுத்தி காட்டுவதாகவும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அவர்களது உச்சகட்ட காலகட்டத்தில் கூட போராடித் தான் வெற்றிகளை பெற்ற நிலையில், இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.