லக்னோ :உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றி விளையாடி வருகின்றன.
மொத்தம் 13 ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், எதிர்கொண்ட மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு தொடர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு திருப்புமுனைகளை எதிர்கொண்டு வருகிறது. நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
அதேநேரம் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, நடப்பு இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளின் போட்டிகள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்று கூறினாலும் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அந்த அணியின் செயல்பாடுகள் மோசமாக காணப்படுகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலிய அணி, தான் சந்தித்த இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
லக்னோவில் இன்று நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி வரும் ஆட்டங்கள் அனைத்திலும், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இனி வரும் போட்டிகள் அனைத்தும் ஆஸ்திரேலிய அணிக்கு இறுதிப் போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்து உள்ளார்.