லண்டன் லார்ட்சில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ட்ராவில் முடிந்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 378 ரன்கள் குவிந்து ஆல் அவுட் ஆனது. அறிமுக வீரர் டிவான் கான்வே அபாரமாக ஆடி (200 ரன்) இரட்டைச் சதம் விளாசினார். இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், மார்க் வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 101.1 ஓவரில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதில் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 132 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 103 ரன்கள் கூடுதல் முன்னிலையுடன் ஆட்டத்தைத் தொடங்கியது நியூசிலாந்து. 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 165 ரன்களுடன் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், ஐந்தாம் நாளும் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, 52.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
பின்னர், 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களத்தில் இறங்கியது. போட்டி முடிய அரை நாள் மட்டுமே உள்ளதால், வீரர்கள் அதிரடி காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால், இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தையே கடைப்பிடித்தது. இறுதியாக, இங்கிலாந்து அணி 70 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதிகபட்சமாகத் தொடக்க ஆட்டக்காரர் சிப்லி 60 ரன்னும், ஜோ ரூட் 40 ரன்னும் எடுத்திருந்தனர்.
எனவே, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ட்ராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக அறிமுகப் போட்டியில் இரட்டைச் சதமடித்த டேவன் கான்வே அறிவிக்கப்பட்டார். இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 10ஆம் தேதி பெர்மிங்காமில் நடைபெறவுள்ளது.