டிரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணி இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று டிரினிடாடின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தியா அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டது. அதேபோல், அக்சர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் பதிலாக ரூத்ராஜ் கெய்க்வாட், ஜெதேவ் உனட்கட் சேர்க்கப்பட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லை.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷன் மற்றும் ஷுப்மன் கில் களம் இறங்கினர். இஷான் கிஷன் 9 ரன்கள் எடுத்த போது கேச் கொடுத்தார் ஆனால் அதை கேசி கர்டி தவரவிட்டார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட இஷான் வேகமாக ரன்களை சேர்த்தார். மறு முனையில் விளையாடிய ஷுப்மன் கில் நாலா பக்கமும் பந்தை சிதரடிக்க அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இந்தியா அணி 19.4 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இஷான் கிஷன் 8 பவுன்டரிகள், 3 சிக்சர்களுடன் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து வந்த ரூத்ராஜ் 8 ரன்களுக்கு வெளியேற, அதன்பின் வந்த சஞ்சு சாம்சன் ஷுப்மன் கில்லுடன் இனைந்து ரன்கள் சேர்த்தார். அணியின் ஸ்கோர் 223 எட்டிய போது சாம்சன் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 51 ரன்களுக்கு அவுட் ஆனார். தொடர்ந்து கில் 11 பவுண்ட்ரிகளுடன் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் அவரின் பங்குக்கு 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ஷர்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்களும், அல்ஸாரி ஜோசப், மோதி, மற்றும் கரியா தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தனர். 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குடாகேஷ் மோதி 39, அலிக் அத்தானாஸ் 32, அல்ஸாரி ஜோசப் 26 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்களும், முகேஷ் குமார் 3 விக்கெட்களும் எடுத்து அசத்தினர். குல்தீப் யாத்வ் 2 விக்கெட்களும், ஜெய்தேவ் உனட்கட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. அத்துடன் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 2006ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் ஷுப்மன் கில் இஷான் கிஷன் கூட்டணியில் அடித்த 143 ரன்கள் பார்ட்னர்ஷிப்பே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்தியா தொடக்க ஜோடியின் அதிகபட்சமாகும். இதற்கு முன்பு 2017ம் ஆண்டு ஷிகர் த்வான் மற்றும் ரஹானே ஜோடி 132 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
இதையும் படிங்க:ஜொலிக்கும் ஆஸ்கார் 'பொம்மன்'.. சென்னையில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி!