இவ்வாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை டி-20 தொடருக்கு இந்திய அணியைத் தயார்படுத்த பிசிசிஐ தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்ச்சியாக விளையாடி வரும் வீரர்களுக்கு ஓய்வளித்தும், பிளேயிங் 11ஐ செட் செய்யத் தகுதியான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கிலும் பிசிசிஐ உள்ளது.
இந்த நிலையில் விராட் கோலி, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களை அடக்கிய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான ஜூனியர் வீரர்களை அடக்கிய அணி அயர்லாந்துக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
ஐபிஎல் தொடர் முடியும் தருவாயில் தென்னாப்பிரிக்காவுடனான டி-20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதில் சில புதுமுக வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. அப்போது ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கு மேல் அடித்த சஞ்சு சாம்ஸனுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் சஞ்சு சாம்ஸன் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் பிளேயிங் 11இல் இடம் அளிக்கப்படவில்லை. சீனியர் அணியில் தான் இடம் அளிக்கவில்லை; ஜூனியர் அணியிலும் 130-க்கும் மேற்பட்ட டி-20 போட்டிகளில் விளையாடிய அனுபவ வீரரான சஞ்சு சாம்ஸனுக்கு இடம் அளிக்க மாட்டீர்களா என அவரது ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.