ஐதராபாத் : இங்கிலாந்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பரிசாக வழங்கினார்.
இந்திய அணியின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இங்கிலாந்தில் தனது மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தேநீர் விருந்து அளித்தார்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் மாளிகைக்கு சென்ற ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கியோகோ ஜெய்சங்கருக்கு பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த சந்திப்பின் போது இருதரப்பினரும் தங்களுக்குள் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.
அப்போது, கிரிக்கெட் பிரியரான ரிஷி சுனக்கிற்கு, இந்திய அணியின் ரன் குவிக்கும் இயந்திரம் என்று அழைக்கப்படும் விராட் கோலியின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை ஜெய்சங்கர் பரிசாக வழங்கினார். இங்கிலாந்து பிரதமர் மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியது குறித்து புகைப்படங்களை பிரதமர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
கிரிக்கெட் மீது அளவு கடந்த மோகம் கொண்ட ரிஷி சுனக், லிதுவேனியாவில் நடந்த வில்னியஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசுடன் இணைந்து 2023 ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டு இருந்த இரு நாட்டு வீரர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த 5 நாட்கள் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :ஐசிசி மதிப்புமிக்கவர்கள் பட்டியலில் இணைந்த இரண்டு இந்தியர்கள்!