ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்ற சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பொதுவாக, ஓர் அணியில் மூன்று அல்லது நான்கு வீரர்கள் ரன்கள் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆகி இருப்பது கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில், 8 வீராங்கனைகள் டக் அவுட் ஆகியுள்ளது தான் இணையளத்தில் இன்றைய வைரல் நியூஸ்.
ஆஸ்திரேலியாவில் மகளிர் அணிகளுக்கு இடையிலான என்.ஐ.சி.சி (National Indigenous Cricket Championship) நேஷனல் இன்டிஜியஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், தெற்கு ஆஸ்திரேலிய - நியூ சவுத் வெல்ஸ் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தெற்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி 10 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில், 8 வீராங்கனைகள் டக் அவுட் ஆகினர். தொடக்க வீராங்கனையான மான்செல் மட்டும் நான்கு ரன்களை அடித்தார். இதனிடையே நியூ சவுத் வெல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் வைட் மற்றும் நோபால்களை உட்பட 6 ரன்களை கொடுத்தனர். இதனால், தெற்கு ஆஸ்திரேலிய அணி இரட்டை இலக்கு ஸ்கோரான 10 ரன்களை எட்டியது.
இதில், நியூ சவுத் வெல்ஸ் அணி வீராங்கனை வென் வீன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமின்றி ஒரு ரன் மட்டுமே அளித்தார். இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த நியூ சவுத் வெல்ஸ் மகளிர் அணி 2.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது.
டி20 கிரிக்கெட் என்றாலே சிக்சர், பவுண்ட்ரி என்று ரன் மழை பொழியும் என்று எதிர்பார்த்தால், இந்தப் போட்டியில் விக்கெட் மழை மட்டுமே பொழிந்தது. வீடியோ கேமில் மட்டுமே நடைபெறும் இதுப் போன்ற சம்பவம் தற்போது நிஜ கிரிக்கெட்டிலும் நடந்துள்ளதுதான் வேடிக்கையான விஷயம்.