டெல்லி :உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக். 15) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இன்று (அக். 15) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. 2 ஆட்டங்களில் விளையாடி உள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதன்மை இடத்தை பிடிக்க இங்கிலாந்து அணி முயற்சிக்கும். அதேநேரம், இங்கிலாந்து அணியில் மிடில் ஆர்டர் வரிசை சற்று பலவீனமாக காணப்படுகிறது. சென்னையில் நடந்த தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது.
அந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் வரிசை ஆட்டம் கண்டது. ஆப்கானிஸ்தான் அணியில் பிரதானமாக சுழற்பந்து வீச்சு காணப்படுகிறது.