அகமதாபாத்: கோலியை பார்க்கும் ஆர்வத்தில் மைதானத்துக்குள் ரசிகர்கள் ஒருவர் இறங்கியுள்ளார். அவரை பார்த்தவுடன் அங்கிருந்து திரும்பி போகுமாறு கோலியே சொன்னதையடுத்து அந்த ரசிகர் திரும்பிச் சென்றார்.
மொட்டேரா மைதானத்தில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று (பிப். 24) நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் இடையே ரசிகர் ஒருவர் கோலியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி மைதானத்தினுள் இறங்கியுள்ளார்.
இதைக் கண்ட கோலி, அந்த ரசிகரை திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். கோலியின் செய்கையை கவனித்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்ய, தன் தவறை உணர்ந்து அந்த ரசிகர் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.
இதுதொடர்பாக குஜராத் கிரிக்கெட் வாரியம் கூறும்போது, மைதானத்துகுள் நுழைந்த ரசிகர் யார் என்பதை தேடி வருகிறோம். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அனைவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தனர்.