தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND vs ENG, மூன்றாவது டி20: பேட்டிங்கில் கவனம் செலுத்தும் இந்தியா

டி20 தொடரை மோசமான தோல்வியுடன் தொடங்கியபோதிலும், அதிலிருந்து உடனடியாக மீண்டு இரண்டாவது போட்டியில் வெற்றிக்கணக்கை தொடங்கிய இந்திய அணி, அதை தக்க வைத்துக்கொள்ள பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக செயல்படும் எனத் தெரிகிறது.

IND vs ENG, 3rd T20I
இந்தியா vs இங்கிலாந்து மூன்றாவது டி20

By

Published : Mar 16, 2021, 2:37 PM IST

அகமதாபாத்:பார்முக்கு திரும்பிய விராத் கோலியின் பேட்டிங், இஷான் கிஷான், ரிஷப் பந்த் ஆகியோரின் பயமிறியா பேட்டிங் என இந்திய அணிக்கு வலு சேர்த்துள்ளதால் இன்று (மார்ச் 16) நடைபெற இருக்கும் மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியான ரன் குவிப்புகள் மூலம் இங்கிலாந்து அணியை அச்சுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட வீரர்கள்

முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றதில் சரியான பாடத்தை இந்திய வீரர்கள் கற்றுக்கொண்டனர். பேட்டிங் சொதப்பலே தோல்விக்கு காரணம் என்பதை நன்கு உணர்ந்து அடுத்த போட்டியில் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினர்.

இஷன் கிஷான், விராத் கோலி ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் இரண்டாவது போட்டியில் வெற்றிக்கு வித்திட்டது. இதன் மூலம் டி20 தொடரில் கணக்கை தொடங்கிய இந்தியா அணி, தற்போது 1-1 என சம நிலையில் உள்ளன.

அறிமுக ஆட்டத்தில் மாஸ் காட்டிய இஷான் கிஷான்

முதல் போட்டியிலேயே 32 பந்துகளில் 56 ரன்களை அதிரடியாக ஆடி குவித்து தனது தேர்வை நியாப்படுத்திய இஷான் கிஷான் இங்கிலாந்த் பவுலர்களுக்கு தலைவலியாக அமைந்தார். அந்த அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆச்சரின் முதல் பந்தை எதிர்கொண்டபோது அதை பவுண்டரிக்கு விரட்டி தனது பயமறியா குணத்தை வெளிப்படுத்தினார்.

இவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுல் சோபிக்க தவறியபோது தனது பங்களிப்பை வெளிப்படுத்தி தனக்கான இடத்தை உறுதிபடுத்திக்கொண்டார் கிஷான்.

பார்முக்கு திரும்பிய கோலி

நீண்ட நாள்களாக அரைசதத்தை பூர்த்தி செய்ய திணறி வந்த கோலி, தனது பார்மை மீட்டெடுக்கும் விதமான இன்னிங்ஸை விளையாடினார். அதிரடி, நிதானம் என இரண்டு வகையான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி அரைசதத்தை பூர்த்தி செய்த கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி பாதைக்கு அணியை அழைத்துச் சென்றார்.

பேட்டிங்கில் முக்கிய மாற்றம்

டெஸ்ட் தொடரில் ஸ்விங், வேகம் என கலக்கும் ஆண்டர்சன் பந்தில் அலட்டிக்கொள்ளாமல் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து பவுண்டரி, அடுத்ததாக டி20 தொடரில் ஆச்சரில் அசுரத்தனமான வேகத்தில் அதே ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்ஸர் என தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி விளையாடினார் ரிஷப் பந்த். அதிரடி காட்டினாலும் தனது ஸ்கோரை பெரிய அளவில் உயர்த்த தவறினார். இன்றைய போட்டியில் இவர் விஸ்வரூபம் எடுக்க கண்டிப்பாக முயற்சிப்பார்.

அதேபோல் முதல் இரண்டு போட்டிகளில் பெரிய அடுத்தடுத்து சொதப்பிய கேஎல் ராகுலுக்கு பதிலாக, பேட்டிங்கில் மேலும் வலுசேர்க்கும் விதமாக பெஞ்சில் இருக்கும் ரோஹித் சர்மா சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. அவ்வாறு அவரை சேர்க்கும் பட்சத்தில் இஷான் கிஷான், ரோஹித் சர்மா, விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திர் பாண்ட்யா என பேட்டிங் யுனிட் வலுப்பெறும்.

உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு வீரர்கள் தேர்வு

வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணியில் குழுவாக விளையாடும் டி20 தொடராக இத்தொடர் அமைந்துள்ளது. எனவே டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு பேட்டிங், பவுலிங் காம்பினேஷன் அமைந்த சிறந்த அணியை தயார்படுத்தும் விதமாக கேப்டன் விராத் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்த்ரி ஆகியோர் அணியை தேர்வு செய்வதில் கவனம் கொள்வது அவசியமானதாக உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி மோதிராவிலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க:‘இஷான் கிஷான்தான் ஹீரோ’ - ரமீஸ் ராஜா புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details