புனே: இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 329 ரன்கள் அடித்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்ட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கிய ராய், புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரின், முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். நான்காவது பந்தில் இரண்டு ரன்களும், மீண்டும் பவுண்டரியும் என விளாசி 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தனது அசத்தலான இன்-ஸ்விங்கர் மூலம் ராயின் ஸ்டெம்புகளை புவனேஷ்வர் சிதறடித்தார். ராய் 14 (6) ரன்னில் நடையைக் கட்டினார்.
இரண்டாவது ஓவரை வீசிய நடராஜன், தனது லைனை சீர்படுத்தத் தவறியதால், இரண்டு வைடுகள் உள்பட 8 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
மூன்றாவது ஓவரில் நான்காம் பந்தில் ஸ்டோக்ஸ் பவுண்டரி அடித்தாலும், ஆறாவது பந்தில் தனது ஸ்லோ-பேஸ் (slow pace) பந்தின் மூலம் பேர்ஸ்டோவை வீழ்த்தினார்.
ஸ்டோக்சும், மாலனும் நிதானமாக ஆடிக்கொண்டிருக்க, புவனேஷ்வர் வீசிய ஐந்தாவது ஓவர் நான்காம் பந்தில் ஸ்டோக்ஸ் கொடுத்த கேட்ச்சை ஹர்திக் பாண்டியா தவறவிட்டார். அப்போது ஸ்டோக்ஸ் 15 ரன்களே எடுத்திருந்தார்.