தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ராகுலின் வெறியான சதத்தால் இந்தியா 336 ரன்கள் குவிப்பு; கோலி, பந்த் அரை சதம் - India vs England

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அதிரடியான ஆட்டத்தால் 337 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ind-vs-eng-2nd-odi-first-innings-break
ind-vs-eng-2nd-odi-first-innings-break

By

Published : Mar 26, 2021, 6:20 PM IST

Updated : Mar 26, 2021, 6:36 PM IST

புனே: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 26) புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இணை களமிறங்கியது. கடந்த போட்டியில் சதத்தை நெருங்கிய தவான், இன்று 4 ரன்களிலேயே ரீஸ் டோப்லி பந்தில் நடையைக் கட்டினார். சிறிதுநேரம் தாக்குப்பிடித்த ரோஹித் 25 (25) சாம் கரன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

இந்தியா 37 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கோலி - ராகுல் இணை, ரன் வேகத்தைச் சீராக அதிகரித்தது. இங்கிலாந்து கேப்டன் பட்லர், ரஷித், மொயின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்களையும் அடுத்தடுத்து பயன்படுத்தி இந்திய அணியை அச்சுறுத்த, கோலியும் ராகுலும் நிதானமாக சுழலை எதிர்கொண்டு ஆடினர். மேலும், கோலி 35 ரன்கள் எடுத்திருந்தபோது ரஷித் பந்தில் பட்லர் கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார்.

கோலி 61 பந்துகளிலும், ராகுல் 66 பந்துகளிலும் அரை சதத்தைக் கடந்தனர். இப்போட்டியில், மூன்றாவது வீரராக களமிறங்கி குறைந்த (190) இன்னிங்ஸில் 10,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

அதிரடி காட்டிவந்த இந்த ஜோடியை ரஷித் உடைத்தார். விராட் கோலி 66 (79) ரன்களில் பட்லரிடம் கேட்ச்சாகி பெவிலியன் திரும்ப, அடுத்ததாக வந்த ரிஷப் பந்த் அதிரடி காட்டினார்.

ரிஷப் பந்த் வந்தவுடன் ராகுல் தன் சதத்தை நோக்கி சீறிப்பாய்ந்தார். மறுமுனையில் ரிஷப்பும் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்க, 28 பந்துகளில் தன் இரண்டாவது ஒருநாள் அரை சதத்தை அடித்து மிரட்டினார்.

43ஆவது ஓவரில் முதல் பந்தில் ஒரு ரன் அடித்ததன் மூலம் ராகுல், ஒருநாள் போட்டிகளில் தன் ஐந்தாவது சதத்தை அடைந்தார். பின், டாம் குரான் பந்தில் டோப்லியிடம் கேட்ச் கொடுத்து 108 (7 பவுண்டரி, 2 சிக்ஸ்) ரன்களில் வெளியேறினார்.

அதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் ரிஷப் பந்தின் அதிரடிக்கு ஈடுகொடுத்தார். சாம் கரன் வீசிய 46ஆவது ஓவரில் ஹர்திக் 2 சிக்சரும், பந்த் 1 சிக்சரும் என 21 ரன்களைக் குவித்து மிரட்ட, இந்திய அணி 300 ரன்களை நோக்கி சீறிப்பாய்ந்தது.

பின் இறுதி ஓவர்களில் ரிஷப் பந்த் 77 (2 பவுண்டரி, 7 சிக்சர்) ரன்களோடும், பாண்டியா 35 (1 பவுண்டரி, 4 சிக்சர்) ரன்களோடும் நடையைக்கட்ட இந்தியா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் டாம் கரன், டோப்லி தலா 2 விக்கெட்டுகளையும்; ரஷித், சாம் கரன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

Last Updated : Mar 26, 2021, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details