இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடர் இரு அணிகளுமே தலா 2 போட்டிகளை வென்று சமநிலையில் உள்ளன. தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி இன்று (மார்ச் 20) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
மினி டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்படும் இன்றையப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றையப் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் நீக்கப்பட்டு தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய மண்ணில் நடராஜனுக்கு இதுவே முதல் சர்வதேசப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரைக் கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்பதால் கடந்த போட்டியைப் போன்று இப்போட்டியும் இறுதிநேரம் வரை பரபரப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ராகுல் சஹர், ஷர்துல் தாக்கூர், நடராஜன்.
இங்கிலாந்து அணி: இயான் மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித், மார்க் வுட்.