தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இறுதிவரை போராடிய  இங்கிலாந்து அணி: பரப்பரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி! - இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது

இந்தியா-இங்கிலாந்து இடையேயான நான்காவது டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்தியா இங்கிலாந்து இடையேயான நான்காவது டி20 பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது
இந்தியா இங்கிலாந்து இடையேயான நான்காவது டி20 பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது

By

Published : Mar 19, 2021, 7:37 AM IST

Updated : Mar 19, 2021, 2:44 PM IST

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று (மார்ச். 18) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்து விளையாடியது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, கோலி என அதிரடி வீரர்கள் அனைவரும் வந்த அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், சர்வதேச டி20 அரங்கில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்ததுடன் அணியின் ஸ்கோரையும் ஜெட் வேகத்தில் உயர்த்தினார். தொடர்ந்து 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பில் 185 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து சற்றே இமலாய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் பட்லர் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த டேவிட் மாலனும் 14 ரன்களில் நடையைக் கட்டினார். மறுமுனையில் அதிரடியாக ஜேசன் ராய் 40 ரன்கள் குவித்த நிலையில், பாண்டியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின் இணை சேர்ந்த பேர்ஸ்டோவும் ஸ்டோக்ஸும் 65 ரன்களை சேர்த்த நிலையில், பேர்ஸ்டோ 25 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஸ்டோக்ஸும் (46), மோர்கனும் (4) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியது.

இறுதி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்துவீச வந்தார். ஓவரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பந்துகளை முறையே பவுண்டரி மற்றும் சிக்சராக ஆர்ச்சர் பறக்கவிட்டார். 3 பந்துகளில் 12 ரன்கள் என்ற நிலையில் அடுத்தடுத்து இரண்டு வைடை தாக்கூர் வீச போட்டி பரப்பாகியது. ஐந்தாவது பந்தில் ஜார்டன் ஆட்டமிழக்க இந்தியாவின் வெற்றி உறுதியானது.

இங்கிலாந்து தனது ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இங்கிலாந்து தரப்பில் இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஆர்ச்சர் 8 பந்துகளில் 18 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் தாக்கூர் 3 விக்கெட்களையும், சஹர், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்களையும், புவனேஸ்வர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தனது முதல் அரைசத்தை பதிவுசெய்த சூர்யகுமார் யாதவ் 57 (31) ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 2-2 சமநிலை பெற்றுள்ளதால், தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டி இதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் சனிக்கிழமை (மார்ச் 20) அன்று நடைபெறவிருக்கிறது.

Last Updated : Mar 19, 2021, 2:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details