ஹைதராபாத்: நடப்பாண்டு உலகக் கோப்பையில் மிகவும் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி இந்த உலகக் கோப்பை தொடருடன் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளாவது; "இந்த ஒரு நாள் வருவதை நான் எப்போதும் விரும்பவில்லை. ஏனெனில் சிறு வயதிலிருந்தே இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தேன். எனவே நிதானமாகச் சிந்தித்து, பரீசிலித்து, இந்த உலகக் கோப்பையுடன் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் நான் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என்பதை மிகவும் வருத்தத்துடன் உணர்கிறேன்.
உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்த இங்கிலாந்து அணியில் நானும் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கால கட்டத்தில் சில மறக்க முடியாத நினைவுகளுடனும், நல்ல நண்பர்களையும், கடினமான சூழ்நிலைகளையும் பெற்றுள்ளேன். மேலும், இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடியதில் பெருமைகொள்கிறேன்" என்றார்.