அதிகாரப்பூர்வமாக ஓய்வு முடிவை அறிவித்திருக்கும் மோர்கன், தனது கிரிக்கெட் பயணம் அவ்வளவு எளிதானாக அமைந்துவிடவில்லை எனவும்; ஓய்வு பெற இது சரியான தருணம் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான காயங்கள் காரணமாகவும், தனது ஆட்டத்தின் பாதிப்பு காரணமாகவும் மோர்கன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அயர்லாந்து நாட்டில் பிறந்தவரான இயான் மோர்கன் 2006ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியின் மூலம் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்தார். அதன்பிறகு இங்கிலாந்து குடியுரிமை பெற்று 2009ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடத் தொடங்கினார். 2010இல் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் மோர்கன் இடம் பெற்றிருந்தார்.
2015இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் குரூப் சுற்றுடன் இங்கிலாந்து வெளியேறியதால் , அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. அப்போது ஒரு நாள் கிரிக்கெட், டி-20 போட்டி கேப்டனாக மோர்கன் அறிவிக்கப்பட்டார். மோர்கன் தலைமையில் இங்கிலாந்து 2019இல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.