தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ENG vs IND: ஸ்டோக்ஸ் படையை வீழ்த்துமா இந்தியா - பிளேயிங் லெவனில் யார் யார் தெரியுமா? - Edgbaston Cricket ground

இங்கிலாந்து - இந்தியா மோதும் டெஸ்ட் போட்டி, பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஜூலை 1) மதியம் 3 மணிக்கு தொடங்கும்.

ENG vs IND
ENG vs IND

By

Published : Jul 1, 2022, 2:02 PM IST

Updated : Jul 1, 2022, 2:21 PM IST

பர்மிங்ஹாம் (இங்கிலாந்து):கடந்தாண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில், நான்கு போட்டிகள் நடைபெற்ற நிலையில், ஐந்தாவது போட்டியின்போது இந்திய வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த ஆட்டம் ரத்துசெய்யப்பட்டது.

தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. மேலும், தொடரின் வெற்றியை தீர்மானிக்க கடைசி போட்டிக்கு பதிலாக மற்றொரு போட்டி நடத்தப்படும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து, இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

பும்ரா கேப்டன்: விடுபட்ட அந்த ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமல்லாமல் டி20, ஒருநாள் தொடர்களையும் இங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாட உள்ளது. இந்நிலையில், டெஸ்ட் தொடரின் 5ஆவது போட்டி பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படுவார் எனத் தெரிகிறது.

ரோஹித் - ராகுல் மிஸ்ஸிங்: கடந்தாண்டு இதே தொடரில், விராட் கோலி கேப்டனாக செயல்பட்டபோது அணியின் முகம் வேறாக இருந்தது. இந்த ஓராண்டுக்குள் பல மாற்றங்களை கண்டுவிட்ட இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் நான்காவது முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்கு முன், 1971, 1986, 2007 ஆகிய ஆண்டுகளில் இந்தியா, இங்கிலாந்தை டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

கடந்தாண்டு நடந்த 4 போட்டிகளிலும், ஓப்பனர்களாக ராகுல் - ரோஹித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 683 ரன்களை சேர்த்து, இந்த தொடரில் இந்திய அணியின் மொத்த ஸ்கோரில் 34 சதவீதத்தை இந்த இணை ஆக்கிரமித்துள்ளது.

ஆனால், தற்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ராகுலும், கரோனா காரணமாக ரோஹித்தும் இல்லாததது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்றைய போட்டியில், சுப்மன் கில்லுடன் ஓப்பனராக புஜாரா இறங்குவார் என கூறப்படுகிறது.

ஓப்பனிங்கில் யார் யார்?: இருப்பினும், ஸ்ரீகர் பாரத் (அ) மயாங்க் அகர்வால் ஆகியோரில் யாருக்குக்காவது வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் உள்ளது. ஓப்பனர்களாக இறங்குபவர்களுக்கு ஆண்டர்சன் - பிராட் ஆகியோரின் ஓப்பனிங் ஸ்பெல்லை சமாளிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு உள்ளது. எனவே, மயாங்க், புஜாரா போன்ற அனுபவமிக்கவர்களையே ஓப்பனிங்கில் இறக்க அணி நிர்வாகம் விரும்பும்.

அஸ்வினா... ஜடேஜாவா...?: அடுத்த பேட்டிங் ஆர்டரை பார்த்தோமானால், விராட் கோலி, ஹனுமா விஹாரி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் என நிலையான பேட்டர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். அந்த வகையில், சுழற்பந்துவீச்சாளர் தரப்பில் அஸ்வின் அல்லது ஜடேஜா ஒருவருக்குதான் வாய்ப்புள்ளது என்பதால், அந்த இடத்திற்கு யாரை வைத்து நிரப்பப் போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. வேகப்பந்துவீச்சாளர்கள் தரப்பில், பும்ரா, ஷமி, சிராஜ், ஷர்துல் ஆகியோரின் கூட்டணிக்கே அதிக வாய்ப்புள்ளது.

இது மெக்கலம்மின் இங்கிலாந்து:இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் பொறுப்பேற்ற பின், அவர்களின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த தொடரில் ஜோ ரூட்டை மட்டுமே நம்பியிருந்த இங்கிலாந்து அணி, இப்போது டாப் டூ பாட்டம் வரை அதிரடியை கைக்கொள்ளும் வகையில், வீரர்களை தயார் செய்துள்ளது. ஏற்கெனவே, இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இரு அணிகளையும் ஒப்பிட்டு பார்த்தால், இங்கிலாந்து சற்று வலுவாக தெரியலாம். இருப்பினும், ஆட்டச் சூழலை பொறுத்து பலம், பலவீனம் மாறுப்படும் என்பதே நிதர்சனம். எனவே, இந்த போட்டியை வெல்லவோ அல்லது டிரா செய்யவோ இந்திய அணி முயற்சிக்கும் நிலையில், கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.

பும்ரா தலைமையிலான இந்திய அணி

பிளேயிங் XI

இந்தியா: சுப்மன் கில், புஜாரா, ஹனுமன் விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா/ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், பும்ரா (கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: அலெக்ஸ் லீஸ், கிராலி, ஓல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், பிராட், லீச், ஆண்டர்சன், மேத்யூ பாட்.

இப்போட்டி, பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும்.

இதையும் படிங்க:மீண்டும்... மீண்டும் நீரஜ் : ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து சாதனை!

Last Updated : Jul 1, 2022, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details