பர்மிங்ஹாம் (இங்கிலாந்து):இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5ஆவது டெஸ்ட் போட்டி, பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 1) தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில், ஜடேஜா 83 ரன்களுடனும், ஷமி ரன்னேதும் இன்றியும் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.
ஜடேஜா சதம்: ஜடேஜா நேற்றும் சற்று நிதானம் காட்டிய நிலையில், ஷமியும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். தொடர்ந்து, மேத்யூ பாட்ஸ் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்ததன் மூலம் அந்நிய மண்ணில் தனது சதத்தை ஜடேஜா பதிவுசெய்தார். இதன்பின்னர், ஷமி 15, ஜடேஜா 104 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கடைசி விக்கெட்டுக்கு பும்ரா - சிராஜ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
பிராடை பொளந்து எடுத்த பும்ரா:அப்போது, 83ஆவது ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீச ஸ்ட்ரைக்கில் பும்ரா இருந்தார். முதல் பந்தில் பவுண்டரியும், இரண்டாவது பந்தில் ஐந்து ரன்களும் (Byes) கிடைத்தன. தொடர்ந்து, மீண்டும் வீசப்பட்ட இரண்டாவது பந்தை பும்ரா சிக்ஸர் அடித்த நிலையில், அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது. எனவே, இரண்டாவது முறையாக இரண்டாம் பந்து வீசப்பட்டது.
அந்த பந்தில் பவுண்டரி அடித்தது மட்டுமின்றி, அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பும்ரா அடிக்க இங்கிலாந்து மனம் ஒடிந்து போனது. கடைசி பந்தில் மட்டும் ஒரு ரன் எடுக்க அந்த ஓவரில் மொத்தம் 35 ரன்கள் எடுக்கப்பட்டன. இதில் பும்ரா 29 ரன்களும், எக்ஸ்டிரா 6 ரன்களும் என்பது குறிப்படத்தக்கது.
பிராட்டின் இரு சாதனைகள்: இதுவே, டெஸ்ட் அரங்கில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் கொடுக்கப்பட்ட ஓவராகும். இதற்கு முன்பு, 2003ஆம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் ராபின் பீட்டர்சன் 28 ரன்கள் கொடுத்த ஓவரே, அதிக ரன்கள் கொடுக்கப்பட்ட ஓவராக இருந்தது.
டி20 அரங்கிலும் இந்தியாவின் யுவராஜ் சிங், பிராட் வீசிய ஓவரில் 36 ரன்களை குவித்திருந்தார். எனவே, டி20-ஐ தொடர்ந்து, டெஸ்டிலும் ஒரு ஓவரில் அதிக ரன்களை கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை பிராட் பெற்றுள்ளார். முன்னதாக, ஷமியின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 550 விக்கெட்டுகளை பிராட் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்டர்சன் ஆட்டம்: இதனை தொடர்ந்து, ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்து 400-ஐ தொட்டது. இந்நிலையில், சிராஜ் 2 ரன்களில் ஆண்டர்சனிடம் ஆட்டமிழக்க 416 ரன்களில் இந்தியா ஆல்-அவுட்டானது. பும்ரா 16 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆண்டர்சன் 5 விக்கெட்டை கைப்பற்றி, தனது 32ஆவது 5 விக்கெட் ஹால்லை (Fifer) பதிவுசெய்தார்.