பர்மிங்ஹாம் (இங்கிலாந்து): இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5ஆவது டெஸ்ட் போட்டி, பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், கடைசி நாள் ஆட்டம் இன்று (ஜூலை 5) நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்றைய 4ஆம் நாள் ஆட்டத்தின் போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்த சில பேர், இந்தியர்களை நோக்கி நிறவெறி கருத்துகளை தெரிவித்ததாக இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக, @AnilSehmi என்ற ட்விட்டர் பதிவாளார் தனது பதிவில், "எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பிளாக் 22 எரிக் ஹோலிஸ் கேலரியில் அமர்ந்திருந்த இந்திய ரசிகர்களை நோக்கி நிறவெறி கருத்துகளை தெரிவித்தனர்.
நாங்கள் பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை 10-க்கும் மேற்பட்ட முறை அழைத்து நிறவெறி கருத்துகளை கூறியவரை அடையாளம் காட்டினோம். ஆனால், அவர்கள் எந்தவித பதிலும் கொடுக்கவில்லை. எங்களை இருக்கையில் அமரும்படி மட்டுமே கூறினார்கள்" என பதிவிட்டிருந்தார்.
இதை யார்க்ஷயர் கவுண்டி அணி வீரர் அசீம் ரஃபிக் ரீ-ட்விட் செய்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான செய்தியை பகிர்ந்த அவர், 'இதை படிக்க மிகவும் ஏமாற்றமாக உள்ளது' என ட்விட் செய்துள்ளார். அசீம் ரஃபீக், யார்க்ஷயர் கவுண்டியில் நடைபெறும் நிறவெறி தீண்டாமை குறித்து, கடந்தாண்டு இங்கிலாந்து நாடாளுமன்ற குழுவின் முன் சாட்சி அளித்தவர் ஆவார். அதன்முலம், யார்ஷயர் மட்டுமல்லாது இங்கிலாந்து முழுவதும் நிறவெறி துவேஷத்தை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல முன்னெடுப்புகளை எடுத்தது.
இதைத் தொடர்ந்து, எட்ஜ்பாஸ்டன் மைதான நிர்வாகம், அசீம் ரஃபிக்கின் பதிவில்,"இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற நடத்தையை ஒருபோதும் மன்னிக்க வேண்டாம். இதுகுறித்து உடனடியாக விசாரிக்கிறோம்" என பதிலளித்துள்ளது. வார்விக்ஷயர் கவுண்டி அணி நிர்வாகம், சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், விரைவில் விசாரணையை தொடங்குவதாகவும் தெரிவித்திருந்தது. வார்விக்ஷயர் அணியின் ஹோம்-கிரவுண்ட் எட்ஜ்பாஸ்டன் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், "டெஸ்ட் போட்டியின்போது இனவெறி துவேஷம் தொடர்பான செய்திகளை கேட்டு நாங்கள் மிகவும் கவலையடைந்தோம். எட்ஜ்பாஸ்டனில் உள்ள சக ஊழியர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் விசாரணை செய்வார்கள். கிரிக்கெட்டில் இனவெறிக்கு எப்போதும் இடமில்லை" என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் இதற்கு உடனடியாக செவிசாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ENG vs IND 5th Test: வெற்றியை நோக்கி இங்கிலாந்து - கடைசி நாளில் மேஜிக் நிகழ்த்துமா இந்தியா?