சென்னை: மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டூவைன் பிராவோ என்று அறிமுகப்படுத்துவதை விட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராவோ என்றே இவரை சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் தனது பெயரை 'டாட்டூ'-வாக பதித்துவிட்டார் டூவைன் பிராவோ. தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு ரசிகர்களையும் அதிகம் கொண்டாடக்கூடியவர் தான் பிராவோ.
இந்நிலையில், கரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதை அறிந்த டூவைன் பிராவோ, நேற்று (மே.22) தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீள மாநில விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.