ஐதராபாத் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி மதிப்புமிக்க வீரர், வீராங்கனைகளை ஹால் ஆப் பேம் (ICC Hall of Fame) பட்டியலில் இணைத்து கவுரவித்து வருகிறது.
தற்போது இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான விரேந்தர் சேவாக், இந்திய மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி மற்றும் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மூன்று பேரையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஐசிசி ஹால் ஆப் பேம் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது. இதில் இந்தியா தரப்பில் 8 பேர் இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர். சுனில் கவாஸ்கர், பிஷன் ஷிங் பேடி, கபில் தேவ், அனில் கும்பிளே, ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், வினோ மன்கட், தற்போது விரேந்தர் சேவாக் மற்றும் டயனா எடுல்ஜி ஆகியோர் ஐசிசியின் மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் உள்ள இந்திய வீரர்கள் ஆவர்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், ஐசிசி ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்த முதல் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமை பெற்று இருக்கிறார், டயானா எடுல்ஜி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் முதல் பல்வேறு மகளிர் கிரிக்கெட் தொடர்களில் டயானா எடுல்ஜி அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், ஐசிசி ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1978 மற்றுன் 1993 ஆண்டுகளில் தனது தலைமையின் கீழ் இந்திய அணியை முன்னோக்கி கொண்டு சென்றது முதல், மூன்று முறை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தனது தனித்துவமான தலைமைப் பண்புகள் மூலம் அணியை வழிநடத்தியது என பல்வேறு மைல்கல்லை டயானா எடுல்ஜி படைத்து உள்ளார்.
தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரை சதம் விளாசியது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 64 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை டயானா எடுல்ஜி படைத்து உள்ளார். 17 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் வழங்கிய பங்களிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அவரை கவுரவிக்கும் வகையில் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைத்து உள்ளதாக ஐசிசி தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த டயானா எடுல்ஜி, ஐசிசி ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைத்தது முற்றிலும் எதிர்பாராத ஒன்று எனக் கூறினார். மேலும், இந்த கவுரவும் தனக்கானது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய மகளிர் கிரிக்கெட் மற்றும் பிசிசிஐக்கு கிடைத்த கவுரவம் என்று கூறினார்.
மேலும், தங்களுடைய காலக் கட்டத்தில் ஊடகங்களின் பற்றாக்குறை உள்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும், இருப்பினும், நாட்டிற்காகவும், கிரிக்கெட்டுக்காகவும் அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற வைராக்கியமும், ஆர்வமும் தங்களுக்கு இருந்ததாக அவர் தெரிவித்தார்.
தற்போது, ஐசிசியிடம் இருந்து கிடைத்த அங்கீகாரம் ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட் சகோதரத்துவத்திற்கும் கிடைத்த பெருமையான தருணம் என்றும் டயானா எடுல்ஜி தெரிவித்தார். மேலும், தற்போது பெண்கள் கிரிக்கெட்டை தங்களது எதிர்காலமாக தொடரலாம் என்றும் ஆண்களை போல் பெண்களும் முன்னேறி கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் நிலை உருவாகி உள்ளது என்றும் டயானா எடுல்ஜி கூறினார்.
டயானா எடுல்ஜியை தொடர்ந்து மற்றொரு இந்திய தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக், மற்றும் 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்ல முக்கிய காரணியாக விளங்கிய அரவிந்த டி சில்வா ஆகியோரும் ஐசிசி ஹால் ஆப் பேம் பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர்.
இதையும் படிங்க :ஐசிசி மதிப்புமிக்கவர்கள் பட்டியலில் இணைந்த இரண்டு இந்தியர்கள்!