மும்பை: கிரிக்கெட் விளையாட்டை 2028 ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆலோசித்து வருகிறது. இப்போட்டிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சியை கமிட்டி எடுத்து வருகிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் நாளை (செப்.08) சுவிட்சர்லாந்தில் உள்ள லொசானில் நடத்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும், வருகிற செப்டம்பர் 15 - 17 மும்பையில் கூடும் கூட்டத்தில் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர், 4 துணைத் தலைவர்கள், 10 உறுப்பினர்கள் என 2028 ஒலிம்பிக்கில் 9 விளையாட்டுக்களை சேர்ப்பதற்கு பரிசீலித்து வருகின்றனர். கிரிக்கெட், கொடி கால்பந்து, கராத்தே, கிக் பாக்ஸிங், பேஸ்பால் - சாப்ட்பால், லாக்ரோஸ், பிரேக்டான்ஸ், ஸ்குவாஷ் மற்றும் மோட்டார் ஸ்போர்ட் ஆகிய விளையாட்டுக்கள் 2028 ஒலிம்பிக்கில் நுழைவதற்கான முயற்சியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.