12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில், விளையாடவிருக்கும் அணிகளின் வீரர்களின் பட்டியலை ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அவர்களைத் தொடர்ந்து, 23 வீரர்கள் கொண்ட உத்தேச அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.
இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஷேன் வார்னே, உலகக் கோப்பைக்கு தான் விரும்பும் ஆஸ்திரேலிய அணியை தேர்ந்தெடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.
அதில், வார்னர், டி ஆர்சி ஷார்ட், ஆரோன் ஃபின்ச், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, பெட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா ஆகியோர் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என பதிவிட்டார். மேலும் அவர்களுடன் ஷான் மார்ஷ், நாதன் லயான், அஷ்டான் டர்னர், குல்டர் நைல் உள்ளிட்ட நான்கு மாற்று வீரர்களையும் அவர் தேர்வுசெய்துள்ளார்.
வார்னேவின் உலகக் கோப்பைக்கான ஆஸி.அணி நடப்பு ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்களை அடித்த உஸ்மான் கவாஜாவை அவர் தேர்வு செய்யாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக இந்தாண்டில் 13 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் இரண்டு சதம், ஆறு அரைசதம் என 769 ரன்களை குவித்துள்ளார்.