1992 ஆம் ஆண்டில் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தியது. வண்ணமையான கலர் ஜெர்சி, சிவப்பு நிற பந்துகளுக்கு பதில் வெள்ளை நிற பந்துகள், முதல் இரவு பகல் போட்டி போன்று கிரிக்கெட்டின் பல்வேறு வளரச்சிகள் இந்ததொடரில் இருந்துதான் தொடங்கியது.
Teams jersey for 1992 WorldCup இந்த தொடரில், ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்றி இருந்தாலும், அனைவரது கவனமும் தென்னாப்பிரிக்க அணி மீதுதான் இருந்தது. இனவெறி சர்ச்சைக்கு பிறகு, அந்த அணி இந்த தொடரில் தான் தனது முதல் உலகக் கோப்பையில் விளையைாடும் உரிமையை பெற்றது.
சச்சின், இன்சாமாம் உல் ஹக், ஜெயசூர்யா,ஸ்டீவ் வாக்,ஜான்டி ரோட்ஸ், போன்ற அடுத்த தலைமுறைகளுக்கான சிறந்த வீரர்கள் இந்த தொடரில்தான் தங்களது முதல் உலகக் கோப்பையில் விளையாடினர்.
Johnty Rhodes Famous Run out இன்சாம் உல் ஹக்கை ஜான்டி ரோட்ஸின் ரன் அவுட் செய்தது, முதல்முறையாக இந்தியா - பாகிஸ்தானுடன் உலகக் கோப்பையில் மோதியது, போன்று பல முக்கியமான நிகழ்வுகள் இந்த தொடரில் நடந்துள்ளது. இந்த தொடரோடு தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவோதால், கேப்டன் என்ற பொறுப்பில் இம்ரான் கான் பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
இன்சாம் உல் ஹக்கின் அதிரிடியான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி, அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியது. இங்கிலாந்து அணி - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில் மழை பெய்ததால், தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது.
இதனால், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இரு அணிகளும் அதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதால், இந்த தொடரை நிச்சயம் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான் அணியில் இம்ரான் கான், வாசிம் அக்ரம், இன்சாமாம் உல் ஹக், மோயின் கான், முஷ்டக் அகமது, ஆகிப் ஜாவித், ஜாவித் மியன்தாத் போன்ற வலுவான அணியாக திகழ்ந்தது.
மெல்போர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, எந்தவித தயக்குமுமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தேடுத்தது. தொடக்க வீரர்கள் அமீர் சோஹைல், ரமீஸ் ராஜா ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பினாலும், நான்காவது வரிசையில் களமிறங்கிய இம்ரான் கான் தனது கடைசிப் போட்டியில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் 72 ரன்களை அடித்தார்.அவருடன் ஜாவித் மியான்தாத், இன்சாம் உல் ஹக் ஆகியோர் நல்ல ஆட்டத்தை வெளிபடுத்தியதால் பாகிஸ்தான் அணி 249 ரன்களை சேர்த்தது.
250 என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரராக வந்த இயன் போத்தமை வாசிம் அக்ரம் தனது வேகப்பந்து வீச்சின் மூலம் டக் அவுட் ஆகினார். இதனால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சைக் கண்டு இங்கிலாந்து அணி பயப்படத் தொடங்கியது.
ஒருபக்கம் வாசிம் அக்ரமின் அபாயகரமான பந்துவீச்சு, மறுபக்கம் முஷ்டாக் அகமதின் சுழற்பந்துவீச்சு, இவற்றை எவ்வாறு எதிர்கொள்வதென்று தெரியாமல் தடுமாறிய இங்கிலாந்து அணி இறுதியில் 227 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இதனால், பாகிஸ்தான் அணி முதல்முறையாக உலகக் கோப்பை தொடரை வென்றது. இம்ரான் கான் என்ற ஆல்ரவுண்டர் இல்லாமல் இருந்திருந்தால் அவர்களது கனவு நிறைவேறியிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
Pakistan won their first ever WorldCup இந்தத் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால்தான் அந்த அணிக்கு கணிக்க முடியாத அணி என்ற பெயர் கிடைத்தது. இந்நிகழ்வு நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனிடையே நடைபெற்ற ஆறு உலகக் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் இறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது நினைவுக்கூற வேண்டிய விஷயமாகும். இதனால், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் இவ்விரு அணிகளும் மீண்டும் இறுதிப் போட்டியில் மோதுமா என்பதே இருநாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.