தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ஸ்மித்... வார்னர்... ஸ்டார்க்' ரிட்டன்ஸ்... உலகக் கோப்பைக்கான ஆஸி. அறிவிப்பு! - Steve Smith

மெல்போர்ன்: இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணியின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான ஆஸி. அறிவிப்பு

By

Published : Apr 15, 2019, 8:40 AM IST

Updated : Apr 15, 2019, 9:51 AM IST

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், விளையாடவிருக்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியாகவுள்ள நிலையில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இப்பட்டியில் இடம்பிடித்திருந்தாலும் உஸ்மான் கவாஜா, ஜெசன் பெஹ்ரன்டார்ஃப், ரிச்சர்ட்சன், அலெக்ஸ் கெரி, ஆடெம் சாம்பா, மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் மொத்தம் ஆறு பேட்ஸ்மேன்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஆல்ரவுண்டர்கள் மற்றும் ஐந்து பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.

உலகக் கோப்பைக்கான ஆஸி. அணி
  1. 6 பேட்ஸ்மேன்கள்: ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், அலெக்ஸ் கெரி
  2. 2 ஆல் ரவுண்டர்கள்: மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்
  3. 2 சுழற்பந்து வீச்சாளர்கள்: அடெம் சாம்பா, நாதன் லயன்
  4. 5 பந்துவீச்சாளர்கள்: மிட்சல் ஸ்டார்க், ஜெசன் பெஹ்ரன்டார்ஃப், பெட் கம்மின்ஸ், நாதன் குல்டர் நைல், ஜெசி ரிச்சர்ட்சன்.

2015 உலகக் கோப்பை ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், மிட்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட ஆறு வீரர்கள் இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

வார்னர் - ஸ்டீவ் ஸ்மித் ரிட்டன்ஸ்

டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கியதற்கு பிறகு உலகக்கோப்பை தொடரில்தான் முதல்முறை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடவுள்ளனர். இதனால், இவர்களது ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு தானாகவே அதிகரித்துள்ளது.

அதேசமயம், ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், கேப்டன் ஆரோன் ஃபின்ச், மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பது அந்த அணியின் பேட்டிங்கை பலப்படுத்தியுள்ளது. மிட்சல் ஸ்டார்க்கின் வருகை அந்த அணியின் பந்துவீச்சுக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்று ஒருநாள் கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியன் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளது.

1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஐந்து முறை உலகக் கோப்பையை வென்று ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லுமா என்பதை உலகக் கோப்பை தொடரை பார்த்தால்தான் தெரியும்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வந்தாலும், உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை எந்த அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Last Updated : Apr 15, 2019, 9:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details