12ஆவது உலகக்கோப்பைத் தொடர் மே.30ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களை அனைத்து அணிகளும் அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணியில் அபித் அலி என்ற அனுபவமில்லாத வீரர் அந்நாட்டிற்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றத் தொடரில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனையடுத்து உலகக்கோப்பை பாகிஸ்தான் அணிக்குத் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
சச்சினை சந்திக்கத் துடிக்கும் பாகிஸ்தான் வீரர்! - உலகக்கோப்பை2019
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர் அபித் அலி, சச்சின் டெண்டுல்கரை பார்த்துதான் எனது கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கினேன் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்நிலையில் அபித் அலி, இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், சச்சினை சந்திக்கும் நாள் எனது வாழ்வில் சிறந்த நாளாக இருக்கும். நிச்சயம் அவரை ஒருமுறை கட்டிப்பிடிக்க வேண்டும். எனது ஆட்டம் குறித்து அவருடன் கலந்துரையாட வேண்டும். எனது கிரிக்கெட் வாழ்க்கையை சச்சினைப் பார்த்துதான் தொடங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானின் சிறந்த வீரர்களான இன்சமாம் உல் ஹக், முகமது யூசுஃப் போன்று இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் சச்சின் மிகச்சிறந்த வீரர் என புகழ்ந்துள்ளார்.