தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

SA Vs PAK: தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி.. இறுதி வரை போராடி தோற்ற பாகிஸ்தான் அணி! - pakistan lost against south africa

ICC Cricket World Cup 2023: பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

south africa vs pakistan
south africa vs pakistan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 2:00 PM IST

Updated : Oct 27, 2023, 10:55 PM IST

சென்னை: ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரின் 25 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று அதன் 26வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலிக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக, அவருக்குப் பதிலாக வசீம் ஜீனியரும், உசாமா மிருக்கு பதிலாக முகமது நவாஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தென் ஆப்பிரிக்கா அணியில் மூன்று மாற்றங்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸுக்கு பதிலாக அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாவும், கசிசோ ரபாடா, லிசாட் வில்லியம்ஸுக்கு பதிலாக தப்ரிஸ் ஷம்சி மற்றும் என்கிடி ஆகிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் அக் களம் இறங்கினர். தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத இந்த ஜோடி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. ஷபீக் 9 ரன்களுடனும், இமாம் 12 ரன்களுடனும் வெளியேறினார். அதன்பின் வந்த பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் கூட்டணி சிறிது நேரமே நிலைத்தது. அணியின் ஸ்கோர் 86 ஆக இருந்த போது ரிஸ்வான் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் இப்திகார் அகமது 21, பாபர் அசாம் 50, ஷதாப் கான் 43, சவுத் ஷகீல் 52 ரன்கள் என வெளியேற, பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்களையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட துவங்கியது. டி காக் முதல் இரண்டு ஓவர்களில் 5 பவுண்டரிகள் அடித்தார். டி காக் 14 பந்துகளில் 24 ரன்கள் இருந்த போது சிக்ஸ் அடிக்க முயன்ற போது ஷகின் அப்ரிதி பந்தில் அவுட்டானார். பின்னர் தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா அதிரடியாக ஆடினார். அவர் வசிம் பந்தில் 28 ரன்களுக்கு அவுட்டானார்.

மூன்றாவது வீரராக களமிறங்கிய மார்க்ரம் நிலைத்து நின்று ஆடினார். பொறுமையாக ஆடிய வான் டர் டியுசன் 21 ரன்களுக்கு உசாமா மிர் பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய நட்சத்திர ஆட்டக்காரர் கிளாசன் வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்து அதிரடியை துவக்கினார். மேலும் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு 12 ரன்களில் வசிம் பந்தில் உசாமாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 136 ரன்களுக்கு 4 விக்கெட் என சற்று தடுமாறிய அணியை மில்லர் மற்றும் மார்க்ரம் இணைந்து மீட்டனர்.

மில்லர் ஒரு பக்கம் அதிரடியாக சிக்ஸர்கள் அடிக்க மார்க்ரம் தூணாக நின்று விளையாடினார். மில்லர் 29 ரன்களுக்கு அப்ரிதி பந்தில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ஜான்சென் சற்று அதிரடி காட்டிய நிலையில் 20 ரன்களுக்கு ராஃப் பந்தில் அவுட்டானார். மார்க்ரம் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உசாமா பந்தில் அவுட்டானது பாகிஸ்தானுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது.

பின்னர் கோயட்சி 10 ரன்களில் அவுட்டானார். 2 விக்கெட் கையில் இருந்த நிலையில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மகாராஜ், நிகிடி ஜோடி சேர்ந்தனர். மறுபக்கம் பாகிஸ்தான் அணியும் அற்புதமாக பந்து வீசினர். நிகிடி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராஃப் பந்தில் அவரிடமே கேட்சி கொடுத்து அவுட்டானார். கடைசியில் ஷம்சி (4), மகாராஜ்(4) ஜோடி பொறுமையாக விளையாடி அணியை கரை சேர்த்தனர். பாகிஸ்தான் அணி கடைசி வரை போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க:சிறப்பாக விளையாடும் அணிக்கு எங்கள் ஆதரவு.. சென்னை மைதானத்தில் ரசிகர்கள் கருத்து!

Last Updated : Oct 27, 2023, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details