கொல்கத்தா: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 30 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், 31வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் களம் இறங்கினர். ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தன்சித் ஹசன் டக் அவுட் ஆக, அதன்பின் வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து களம் புகுந்த மஹ்முதுல்லாஹ் - லிட்டன் தாஸுடன் கைகோர்க்க இந்த கூட்டணி அணிக்கு நிதானமாக ரன்களை சேர்த்து வந்தது. அரைசதத்தை நெருங்கிய லிட்டன் தாஸ் அணி 102 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அவர் 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மறுபக்கம் இருந்த முஹ்முதுல்லாஹ் அரைசதம் கடந்து 56 ரன்களுக்கு வெளியேறினார்.
இதையடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஓரளவு விளையாடி முறையே 43, 25 ரன்களும் எடுத்தனர். இறுதியில் வங்கதேசம் அணி 45.1 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.