புனே: ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் 32 வது லீக் ஆட்டம் இன்று (நவ.01) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா களம் இறங்கினர். இத்தொடரில் இதுவரை பெரிதாக சோபிக்காத பவுமா இப்போட்டியிலும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின் வந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் - டி காக்வுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தது. இருவரும் அரைசதம் கடக்க, தொடக்க முதல் சிறப்பாக விளையாடிய டி காக் சதம் விளாசினார். பின்னர் 114 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த சதம் மூலம் நடப்பாண்டு உலக கோப்பையில் தனது 4வது சதத்தைப் பதிவு செய்தார்.
இவரைத் தொடர்ந்து சதம் அடித்த வான் டெர் டுசென் 133 ரன்களில் ஆட்டமிழக்க, டேவிட் மில்லரின் அதிரடியான அரைசதத்தால் அணியின் ஸ்கோர் 350 ரன்களை நெருங்கியது. 50 ஓவர்கள் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.