கொல்கத்தா: ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் 37வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். இந்த கூட்டணி நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை என்றாலும், தொடக்கமே அணிக்கு ரன்களை சேர்த்து வெளியேறியது. முதலில் ரோகித் சர்மா 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்களில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் - விராட் கோலி ஜோடி சேர, இந்த கூட்டணி அணிக்கு நிதானமான முறையில் ரன்களை சேர்த்து வந்தது. இருவரும் அரைசதம் கடக்க, பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்தது.
ஒரு கட்டத்தில் ஸ்ரேயாஸ் 77 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் வந்த கே.எல்.ராகுலும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது.