புனே: வங்கதேசம் - இந்திய இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நேற்று (அக்.19) புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 48வது சதத்தை விளாசினார்.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்களும், தன்சித் ஹசன் 51 ரன்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி அந்த இலக்கை துரத்த 41.3 ஓவர்களே எடுத்துக்கொண்டது.
தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினர். அரைசதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா 48 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் இருந்த மற்றொறு தொடக்க வீரரான கில், அரைசதம் விளாசினார். ரோஹித் சர்மா பெவிலியன் திரும்பியதும், களம் புகுந்த விராட் கோலி, தனக்கு கிடைத்த நோ பாலின் மூலம் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.
மறுமுனையில் கில், ஷ்ரேயாஸ் என விக்கெட்கள் சரிந்தாலும், கோலி நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கோலி ஃபோர், சிக்ஸ் என ரன்களை குவித்த நிலையில், 80 ரன்களை கடந்தார். அப்போது வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்தது. அதேசமயம் கோலியின் சதத்திற்கும் 20 ரன்கள் தேவையாக இருந்தது.