தர்மசாலா: ஐசிசி உலக கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 21வது லீக் ஆட்டம் நாளை (அக். 22) தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. நடப்பு உலக கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த இரு அணிகளும் எதிர்கொண்ட 4 போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி இந்திய அணியை விட நெட் ரன்ரேட் அதிகமாக வைத்து இருப்பதால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
இதுவரை இரண்டு முறை உலக கோப்பைகளை வென்ற இந்திய அணி, இம்முறை சொந்த மண்ணில் நடப்பதால் மூன்றாவது முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முன்னைபுடன் விளையாடி வருகிறது. மறுப்பக்கம் கடந்த இரு சீசன்களாக (2015 மற்றும் 2019) இறுதி போட்டி வரை முன்னேறி தோல்வியை தழுவிய வேதனையுடனும், வெறியுடனும் இந்த உலக கோப்பையில் களம் இறங்கி விளையாடி வருகிறது நியூசிலாந்து அணி.
அதற்கு ஏற்றவாரு முதல் போட்டியில் இருந்தே வெறி கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி, இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று மிகுந்த பலத்துடன் காணப்படுகிறது. இந்திய அணியோ 2003ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இதுவரை நியூசிலாந்து அணியை வென்றது இல்லை என்ற மோசமான சாதனையுடன் தொடர்ந்து வருகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
உலக கோப்பை 1975
உலக கோப்பை தொடரின் ஆரம்ப நிலையில், இவ்விரு அணிகளும் மோதின. 60 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சையத் அபித் அலி 70 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் எவரும் பெரிதாக சோப்பிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 58.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிறகு 233 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் கிளென் டர்னர் 114 ரன்கள் அடித்து அசத்தினார். அதற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை 1979
உலக கோப்பை 2வது சிசனில், மீண்டும் இவ்விரு அணிகளும் மோதிக் கொண்டன. கடந்த சீசன் போல் நியூசிலாந்து அணியே இம்முறையும் வென்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி - இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களம் இறங்கிய வெங்கடராகவன் தலைமையிலான இந்திய அணி 182 ரன்களுகே ஆட்டமிழந்தது.
அதன்பின் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய நியூசிலாந்து அணி தனது முதல் விக்கெட்டை இழப்பதற்கு எடுத்து கொண்ட ரன்கள் 100 ஆகும். இறுதியில் நியூசிலாந்து அணி 57 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
உலக கோப்பை 1987
இந்த சீசனை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நடத்தின. இந்த உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை மோதின. அவ்விரண்டிலுமே இந்திய அணியே வெற்றி பெற்றது. கபில் தேவ் தலைமையிலான அணி முதல் போட்டியில் 50 ஓவர்களுக்கு 252 ரன்கள் எடுத்தது. ஆனால் நியூசிலாந்து அணியோ 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.