சென்னை: உலக கோப்பை 2023, போட்டியில், இந்தியாவுக்கான முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில், அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி “Slow and Steady Wins the Race “என்ற பழமொழிக்கு ஏற்றதை போல் நிதானமான ஆட்டத்தின் மூலம் உலக கோப்பையின் முதல் லீக் போட்டியில் 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து. இதைத் தொடர்ந்து, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் 2வது ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் மார்ஷ் அவுட்டானது ஆஸ்திரேலியாவுக்கு சற்று தடுமாற்றத்தை கொடுத்தது.
அதன் பிறகு வந்த ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருடன் கைக்கோர்க, 16 ஓவர்கள் வரை விறுவிறுப்புக்கு குறைவின்றி நிதனாமான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் குல்தீப் யாதவின் சிறப்பான பந்து வீச்சால் டேவிட் வார்னர் அவுட் ஆனார். தொடர்ந்து ரவீந்தர ஜடேஜாவின் சுழற்பந்தில், ஸ்மித் 46 ரன்களில் போல்டானார்.
மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி என ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 119 ரன்களுடன் திணறியது. இறுதியில், 199 ரன்களுக்குள் அந்த அணி ஆல்-அவுட்டாகியது. இதனைத் தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி.
முதல் ஓவரின் 4வது பந்தில் இஷான் கிஷன் வெளியேற, அதைத் தொடர்ந்து ரோகித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர் என அடுத்தடுத்து அவுட்டாகினர். இந்திய அணி 2 ஓவர்களில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தத்தளிக்கத் தொடங்கியது. பின்னர் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடத் தொடங்கினார்கள்.
சிறப்பான பார்டனர்ஷிப்: தொடக்க வீரர்கள் டக் அவுட் ஆகிய நிலையில், சரிவில் இருந்த இந்திய அணியை, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் தங்கள் நிதானமான ஆட்டத்தின் மூலம் மீட்டனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த இருவர் கூட்டணி 203 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்து வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.
ஆனால் எதிர்பாராத விதாம 37-ஆவது ஓவரில், விராட் கோலி 85 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஆடிய ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் கூட்டணி 41வது ஓவரில் 201 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அபார வெற்றி பெற வைத்தது.
ஹேசில்வுட்-க்கு, இந்திய ரசிகர்கள் ஆராவாரம்: இந்திய அணிக்க எதிராக பந்து வீசிய ஹேசில்வுட், ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் என இருவரை அடுத்தடுத்து டக் அவுட் செய்ததற்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று ஹேசில்வுட்-விற்கு கைதட்டி பாராட்டுகளை தெரிவித்தனர். இதற்கு முன்னதாக 1999ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு, சென்னை சேப்பாக்கமே எழுந்து நின்று கைதட்டியது குறிப்பிடத்தக்கது.
அதிக கேட்ச் பிடித்த விராட்: இந்த போட்டியில் மட்டும் கோலி இரண்டு கேட்ச்களை பிடித்து அசத்தி உள்ளார். இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த ஃபீல்டர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
பும்ரா சாதனை: மிட்செல் மார்ஷின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய ஓப்பனிங் பேட்ஸ்மேனை டக் அவுட் செய்த வீரர் என்ற புதிய வரலாறு சாதனைக்கு பும்ரா சொந்தக்காரராகி உள்ளார்.
அதேபோல், ஆஸ்திரேலியா அணியின் வேகபந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், மூன்று ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டை இந்திய அணி இழந்தது. இந்திய அணி தரப்பில், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஹர்திக் பாண்டியா, முஹம்மது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதேப்போல் ஆஸ்திரேலியா அணியில், ஹேசில்வுட் 3 விக்கெட்களும், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பழைய போட்டியுடன் ஒப்பீடு: 2019ல் நடந்த 50 ஓவர் உலககோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. அதேபோல, நடப்பு உலககோப்பை தொடரிலும் முதல் போட்டியில், 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியதை, ரசிகர்கள் 2 போட்டிகளின் ஸ்கோர் கார்டுகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து விவாதம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் சுழற்பந்து, ஆஸ்திரேலியாவில் வேகபந்து: இந்த ஆட்டத்தில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களால் ஆஸ்திரேலியா அணியின் அஸ்திவாரம் ஆடிப்போனாது. அதேப்போல், ஆஸ்திரேலியா அணியின் வேகபந்து வீச்சாளர்களின் பந்தை சமாளிக்க முடியாமல், மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டை இந்திய அணி இழந்தது.
பொதுவாக சென்னை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடிய நிலையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வேகபந்து வீச்சாளர்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 : 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி!