அகமதாபாத்: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபத்தில் தொடங்கியது. இதன் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் இடம் பெறவில்லை. மறுபுறம் இங்கிலாந்து அணியில் முன்னணி வீரரான பென் ஸ்டோக்ஸ் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகினார்.
இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் நெருக்கடி கொடுத்த நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கண்ணாய் இருந்தனர். அதன்படி டேவிட் மலான் (14 ரன்கள்) இங்கிலாந்து அணியின் விக்கெட் கணக்கை தொடங்கி வைத்தார்.
அடுத்தடுத்து களம் இறங்கிய வீரர்கள், நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வந்தனர். ஜானி பேர்ஸ்டோவ் 33 ரன், ஹாரி ப்ரூக் 25 ரன், மொயின் அலி 11 ரன் என அடுத்தடுத்து குறுகிய ரன்களில் இங்கிலாந்து வீரர்கள் நடையை கட்டினர். இதனால் ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.
அதேநேரம் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ஜோ ரூட் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அவரும் இக்கட்டான சூழலில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 77 ரன்கள் குவித்து அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவினார்.
மறுபுறம் கேப்டன் ஜோஸ் பட்லர் தன் பங்குக்கு 43 ரன்கள் குவித்து வெளியேற மீண்டும் இங்கிலாந்து அணி இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டது. அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 282 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் சார்பபில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 3 விக்கெட்டும், சான்ட்னர் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் களம் இறங்கினர். வில் யங் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் கான்வேவுடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசினர். தொடர்ந்து அதிரடி காட்டிய கான்வே 150 ரன்களை குவித்தார்.
இறுதியில், 36.2 ஓவர்கள் முடிவில் 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கான்வே 121 பந்துகளில் 152 ரன்களுடனும், ரவீந்திரா 36 பந்துகளில் 123 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இவர்களது பார்ட்னர்ஷிப் 273 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் சாம் கர்ரன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இதையும் படிங்க:நீண்ட நாள் கனவு நனவானது.. விராட் கோலிக்காக 40 மணிநேர உழைப்பு.. சென்னை ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விராட்!