ஹைதராபாத்: ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை இந்தியாவில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 6வது லீக் போட்டியாக நாளை நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
உலக கோப்பையில் நெதர்லாந்து:1996ஆம் ஆண்டு தான் முதல் முறையாக நெதர்லாந்து அணி உலக கோப்பைக்கு தேர்வானது. இதுவரை நடைபெற்ற 12 எடிஷனில் நெதர்லாந்து அணி 1996, 2003, 2007, 2011 என 4 எடிஷனில் மட்டுமே விளையாடி உள்ளது. மொத்தமாக 20 போட்டிகளில் விளையாடி உள்ள இந்த அணி அதில் வெறும் இரண்டு போட்டி மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.
நெதர்லாந்து - நியூசிலாந்து:இந்த இரு அணிகளும் இதுவரை உலக கோப்பை வரலாற்றில் ஒரே ஒரு முறையே சந்தித்துள்ளது. உலக கோப்பைக்கு தேர்வாகி அவர்கள் முதல் போட்டியாக நியூசிலாந்தை சந்தித்தனர். அந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. அதன் பின் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டகளை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
நாளை இந்த இரு அணிகளும் உலக கோப்பையில் இரண்டாவது முறையாக சந்திக்கின்றது. நியூசிலாந்து அணியை பார்க்கையில், கடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எளிதாக வென்றது. 283 ரன்கள் இலக்கை அந்த அணி 36.2 ஓவர்களிலேயே சேஸ் செய்தது. தொடக்க வீரரான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்தரா அருமையாக விளையாடி சதம் விளாசினர்.
மிடில் ஆடர் பேட்மேன்களான டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். அதே போல் பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விக்கெட்களை கைப்பற்றி நல்ல நிலையிலேயே உள்ளனர்.
மறுபுறம் நெதர்லாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை அனைத்து விக்கெட்களையும் இழக்க செய்தனர். குறிப்பாக பேட்டிங் ஆல்-ரவுண்டர் பாஸ் டி லீடே 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இருப்பினும் முழுநேர பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை அதிகம் எடுப்பதில் திட்டமிட வேண்டும்.