தர்மசாலா: 13வது ஐசிசி உலக கோப்பை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3வது லீக் ஆட்டமாக நாளை 10.30 மணிக்கு தர்மசாலாவில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணி மோதுகின்றன. சமபலம் கொண்ட இரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
வங்கதேசம் அணியை பெருத்தவரை சற்று தடுமாற்றத்துடனே இருந்துள்ளது. ஆசிய கோப்பையில் வெறும் இரு போட்டிகளை மட்டுமே கைபற்றியது. ஆனால் நம்பிக்கை அளிக்கும் விதமாக மூன்று வருடத்திற்கு முன்பு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இளம் வீரர்களான டவ்ஹித் ஹ்ரிடோய், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் தன்சித் ஹசன் ஆகியோர் அணியில் உள்ளனர்.
குறிப்பாக ஹ்ரிடோய் இந்த ஆண்டு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். அதே போல் தன்சித் ஹசன் மீது அதிக ஏதிர்ப்பார்ப்பு உள்ளது. ஏனெனில் தன்சித் மற்றும் லிட்டன் தாஸான இரண்டு வழக்கமான தொடக்க வீரர்களை மட்டுமே வங்கதேசம் தேர்வு செய்துள்ளது.
மேலும், ஆல் ரவுண்டரான மெஹிதி ஹசன் மிராஸ் ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 112 ரன்களை விளாசினார். பந்து வீச்சில் தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக உள்ளனர். அனுபவ வீரர்களான ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் சந்திக்கும் 5வது உலக கோப்பையாக இது உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால், அவர்கள் கடந்த 2019ஆம் அண்டு நடைபெற்ற உலக கோப்பையில் அவர்கள் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அதே போல் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையிலும் அவர்கள் எந்த வெற்றியும் பெறவில்லை. ஆகையால் ஆவர்கள் பெரிய போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
பேட்டிங்கில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். அதே நேரத்தில் சூழல் பந்து வீச்சில் நம்பிக்கையாக இருக்கும் ரஷித் கான், முகமது நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பெறுத்தே உள்ளது.