லக்னோ: ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 34வது லீக் ஆட்டம் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணி மோதின.
டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களான வெஸ்லி பாரேசி மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் களம் இறங்கினர். ஆனால், ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத வெஸ்லி 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர், ஓ'டவுட் மற்றும் கொலின் அக்கர்மேன் பொறுப்புடன் ஆட, ஸ்கோர் 73 ஆக இருந்தபோது, ஓ'டவுட் ரன் அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து ஸ்காட் எட்வர்ட்ஸ் 0, பாஸ் டி லீடே 3, சாகிப் சுல்பிகர் 3, லோகன் வான் பீக் 2 ரன்கள் என அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
அதிகபட்சமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மட்டுமே 58 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை 150 கடக்க செய்தார். இறுதியில், 46.3 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆனது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.