மும்பை: ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் இந்திய - இலங்கை மோதின. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா - சுப்மன் கில் களம் இறங்கினர். ஆட்டத்தில் முதல் பந்திலேயே ஃபோருடன் தொடங்கிய ரோகித் சர்மா, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து விராட் கோலி - கில்லுடன் கைகோர்க்க, இந்த கூட்டணி சிறப்பாகச் செயல்பட்டு நிதானமான முறையில் அணிக்கு ரன்களை சேர்த்தது.
இருவரும் அரைசதம் கடந்தனர். இலங்கை அணி விக்கெட்களை வீழ்த்த முடியாமல் தடுமாறி வந்தது. ஒரு கட்டத்தில் சதம் நெருங்கிய கில் 92 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே 88 ரன்களில் விராட் கோலியும் ஆட்டமிழந்தார். பின்னர் கே.எல்.ராகுல் 21, சூர்யகுமார் யாதவ் 12 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். போட்டியின் 48 ஓவரை வீசிய மதுஷங்க அந்த ஓவ்ரின் மூன்றாவது பந்தில் ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் அவர் 82 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.