கொல்கத்தா: ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இந்தியா, அஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இத்தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இரு அணிகளுமே நடப்பாண்டு உலக கோப்பை தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், வங்கதேசம் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் வெற்றி பெற்றுள்ளனர்.
உலக கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் ஒரு முறை மட்டுமே மோது உள்ளது. 2011ஆம் ஆண்டு நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. ரியான் பத்து டோஸ்கேட் மட்டுமே 53 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். மற்ற வீரர்கள் எவரும் பெரிதாக விளையாடவில்லை. 161 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசம் அணி 41.2 ஓவர்கள் முடிவில் 166 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரரான இம்ருல் கயஸ் 113 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில், உலக கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக இவ்விரு அணிகளும் நாளை சந்திக்கிறது. வங்கதேசம் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியில் மஹ்முதுல்லாஹ் தவிர்த்து எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் 1 ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் செய்த தவறுகளை திருத்திக்கொள்ளும் பட்சத்தில் அந்த அணி நாளை வெற்றி பெற வாய்ப்புள்ளது.
நெதர்லாந்து அணியோ புள்ளிப் பட்டியலில் கடைசியாக உள்ளது. அவர்களது நெட் ரன்ரேட் -1.902 ஆக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் இவர்கள் 309 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதே. இவர்களை பொறுத்தவரை நாளைய போட்டியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தினால் மட்டுமே வெற்றியை இவர்களால் பெற முடியும்.
மோதும் அணிகள்: நெதர்லாந்து - வங்கதேசம்