சென்னை: ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. இதுவரை நடைபெற்ற லீக் போட்டியின் முடிவில், இந்திய அணி முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முறையே 2, 3, 4 என்ற இடங்களில் உள்ளது.
இந்நிலையில், இத்தொடரின் 26வது லீக் ஆட்டம் நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.
தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை நடப்பாண்டு உலக கோப்பை போட்டியில் தொடக்கம் முதலே அசத்தி வருகிறது. அந்த அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் அபார வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து வருகிறது.
தொடக்க வீரரான குயின்டன் டி காக் நடப்பு சீசனில் 3 சதங்கள் விளாசி அற்புதமான ஃபார்மில் உள்ளார். அதேபோல் ஹென்ரிச் கிளாசென் அவரது அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். சக வீரர்களான எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் அணிக்கு பக்க பலமாக உள்ளனர். மேலும், காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா கடந்த இரு போட்டிகளில் கலந்து கொள்ளாத நிலையில், இந்த போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சை பொறுத்தவரை ககிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் நல்ல நிலையிலேயே உள்ளனர். சுழற்பந்து வீச்சில் கேசவ் மகாராஜா இதுவரை பெரிதாக விக்கெட்கள் கைபற்றவில்லை என்றாலும், தனது பந்துவீச்சில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தி வருகிறார். நாளைய போட்டி சென்னையில் நடைபெறுவதால் தப்ரைஸ் ஷம்சி அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பாண்டு உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி தொடக்கம் முதலே தடுமாறி வருகிறது. இதுவரை விளையாடிய போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் என கடந்த மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான நிலையில் உள்ளது. அதனால் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பேட்டிங்கில் முகம்து ரிஸ்வான் மட்டுமே தொடர்ச்சியாக அணிக்கு ரன்கள் சேர்த்த வண்ணம் வருகிறார். பாபர் அசாம், அப்துல்லா ஷபீக் ஆகியோர் நல்ல நிலையில் இருந்தாலும், அவர்களின் பங்களிப்பு அணிக்கும் இன்னும் தேவையாக உள்ளது. மற்ற வீரர்கள் எவரும் இதுவரை பொரிதாக சோபிக்கவில்லை.