உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மே 30ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கியுள்ள நிலையில், அனைத்து அணிகளின் கேப்டன்களும் செய்தியாளர்களிடம் பேசினர். அதில் கேப்டன்கள் தங்களுடைய சிறுவயது உலகக்கோப்பை நியாபகங்களை பகிர்ந்துகொண்டனர்.
அதில், இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேசுகையில், சிறுவயதில் உலகக்கோப்பைத் தொடரினைப் பார்க்கையில் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் சதம் விளாசுவதுபோல் கனவு கண்டுள்ளேன். ஆனால் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக விளையாடுவது வாழ்நாளில் மிகச்சிறந்த உணர்வு எனக் கூறினார்.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேசுகையில், என் 11 வயதில் 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவை மூன்று ரன்களில் வீழ்த்தியது இன்று வரை மிகவும் பிடித்த போட்டி எனத் தெரிவித்தார்.
விராட் கோலி - இயன் மோர்கன் - சர்ஃப்ராஸ் அஹமது பின்னர், இந்திய கேப்டன் விராட் கோலி பேசுகையில், உலகக்கோப்பை தொடரைப் பார்ப்பதற்காக பள்ளிக்கு செல்லாமல் இருந்தேன். 1996ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டிகள் அனைத்தும் என் நினைவில் அப்படியே உள்ளது. எந்த போட்டியையும் மறக்க முடியாது எனப் பேசினார்.
அதேபோல் முதன்முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்கள் ரசிகர்களின் அன்பையும், மிகச்சிறந்த கரகோஷத்தையும் பார்ப்பார்கள். குழந்தைகள் தங்களது ஹீரோக்களை பார்க்க மிகச்சிறந்த வாய்ப்பு. சிறு குழந்தைகளுக்கு சிறந்த விளையாட்டால் மட்டும் எடுத்துக்காட்டாய் திகழமுடியாது. தோல்வியை உடைத்தெறிந்து எவ்வாறு வெளியே வருகிறோம் என்பதில்தான் நாம் ஹீரோவாக முடியும்.
மேலும் இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களின் நம்பிக்கையோடு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது மிகவும் பெருமையாக உள்ளது. இதுவரை அனுபவித்திடாத மிகச்சிறந்த உணர்வினை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறினார்.