உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நேற்று டவுன்டான் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 17ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது அதிரடி கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 111 பந்துகளில் 107 ரன்கள் (11 பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள்) குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இறுதியில் இப்போட்டியில் சிறப்பாக ஆடி சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் வார்னருக்கு 'மேன் ஆஃப் தி மேட்ச்' விருது வழங்கப்பட்டது.
அவர் போட்டிக்கு பின் மைதானத்தில் இருந்த ரசிகர்களுடன் படம் எடுத்துக்கொண்டார். அப்போது அங்கு தனது தந்தையுடன் நின்று கொண்டிருந்து சிறுவனிடம்தான் வாங்கிய டமேன் ஆஃப் திட விருதை வார்னர் அளித்தார்.
இதை சற்றும் எதிர்பாராத அச்சிறுவன் மகிழ்ச்சியில் வாயடைத்து நின்றான். இந்த வீடியோ ஐசிசியின் உலகக்கோப்பை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வார்னரின் இந்தச் செயலை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட சமூக வலைதளவாசிகள் புகழ்ந்து தள்ளிவருகின்றனர்.