உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கோல்டர் நைல் 92, ஸ்மித் 73 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அந்த அணியின் எவின் 1 ரன்னில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரும், அணியின் நம்பிக்கை நாயகனுமான கிறிஸ் கெயில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார். அவர் 17 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்திருந்தபோது மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டபிள்.யூ முறையில் ஆட்டமிழந்தார்.
ரசிகரின் காட்டமான ட்விட்டர் பதிவு ஆனால், ஸ்டார்க் வீசிய அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கிறிஸ் கெயில் ஆட்டமிழப்பதற்கு முன்பாக நான்காவது பாலை ஸ்டார்க் நோ-பாலாக வீசியுள்ளது தெளிவாக கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை அம்பயர்கள் சரியாக கவனிக்காததால், கெயில் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். அப்படி ஸ்டார்க் வீசிய நோ-பாலை அம்பயர் ஒழுங்காக கவனித்திருந்தால், ஐந்தாவது பந்து ப்ரி-ஹிட்டாக அளிக்கப்பட்டிருக்கும். எனவே கெயில் ஆட்டமிழக்காமல் இருந்திருப்பார்.
நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது ஆஸ்திரேலிய அணியிடம் 15 ரன்களில் தோல்வியுற்றது.
அதிரடி ஆட்டக்காரரான கெயில், ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் நேற்றைய போட்டியின் முடிவு மாறியிருக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் அம்பயர்கள் சமீபகாலமாக இதுபோன்று கவனக்குறைவாக செயல்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நேற்றை போட்டியின் முடிவால் ஆதங்கமடைந்த ரசிகர்கள் அம்பயர்களை ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து வருகின்றனர்.