உலகக்கோப்பையில் களமிறங்கும் எந்த ஒரு வீரருக்கும், தங்களது நாட்டின் பெருமையை எதோ ஒரு விதத்தில் உயர்த்திட வேண்டும் என்பதே கனவாக இருக்கும். அப்படி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பல வீரர்களின் கனவு நனவானது. அனுபவ வீரர்களோடு அறிமுக வீரர்களும் உலகக்கோப்பையில் பங்கேற்றனர். இதுவரை ரசிகர்கள் பார்த்திடாத அளவிற்கு பல திருப்புமுனைகளுடன் இந்த உலகக்கோப்பை தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால், இந்த தொடரில் எதிர்பார்த்த வீரர்கள் சிலர் சொதப்பினர், எதிர்பாராத சிலர் சிறப்பாக ஆடி சர்ப்ரைஸும் தந்தனர்.
3டி விஜய் சங்கர்- 78 ரன்கள், இரண்டு விக்கெட்டுகள்
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ராயுடு இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது, விஜய் சங்கரின் பெயர் இடம்பெற்றதால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று விதமான பரிமாணங்களிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்பதால்தான் அவரைத் தேர்வு செய்தோம் என தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்தார்.
ஷகிர் தவான் காயம் காரணமாக விலகியதால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் விஜய் சங்கர். இதன்மூலம், உலகக்கோப்பை போட்டியிலும் அவர் அறிமுகமானார். ஆறாவது வீரராக களமிறங்கிய விஜய் சங்கர், ஆட்டத்தின் இறுதியில் அதிரடியை வெளிப்படுத்தாமல் தடுமாறினார். ஆனால், பவுலிங்கில் மிரட்டி அனைவருக்கும் ஷாக் தந்தார் இந்த 3டி மேன். புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக தடுமாறியபோது, விஜய் சங்கர் தனது முதல் பந்திலேயே பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக்கை வெளியேற்றினார். பின்னர் சர்ஃப்ராஸ் அஹமதையும் அவுட் செய்தார்.
இதனால், ஒரே நாளில் செம ஹாப்பியான விஜய் சங்கர் அதன் பின்னர், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் நான்காவது வரிசையில் களமிறக்கப்பட்டார். ஆனால், எதிர்ப்பார்த்த அளவிற்கு அவரின் ஆட்டம் சிறப்பாக இல்லை. மேலும் இப்போட்டிகளில் அவரை பவுலிங்கிற்கும் கோலி பயன்படுத்தவில்லை.
ராயுடு ஏதேனும் சூனியம் வைத்தாரோ என்னவோ பயிற்சியின்போது இவருக்கு காயம் ஏற்பட்டு, உலகக்கோப்பையில் இருந்து கழற்றிவிடப்பட்டார். நான்காவது வரிசையில் நீடிக்கும் பிரச்னையை சரிசெய்யவே இவர் அந்த வரிசையில் களமிறங்கப்பட்டார். ஆனால், அந்த பிரச்னையை சரி செய்யமால், அவரே இந்திய அணிக்கு பிரச்னை ஆகியதுதான் வேதனை.
மேக்ஸ்வெல்- 177 ரன்கள்
இந்த பட்டியலில் அடுத்த வீரர் மேக்ஸ்வெல்தான். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இவர், அணியின் இறுதிக்கட்டத்தில் மிரட்டுவார் என்று எதிர்பார்த்தால், களத்திற்கு வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை என்ற கதையாக, க்ரிஸுக்கு அவ்வப்போது வந்து பெவிலியனுக்கு திரும்பினார் மேக்ஸி. 10 போட்டிகளில் பேட்டிங் ஆடியும் இவர் அடித்தது 177 ரன்கள்தான். பவுலிங்கில்... இங்கிலிஷ்காரன் திரைப்படத்தில் பாக்கெட்டில் ஒன்னும் இல்லை என்பதை வடிவேலு சிம்பாலிக்காக காட்டுவதை போலதான் இருந்தது இவரது பவுலிங் பெர்ஃபாமன்ஸ். ஃபீல்டிங்கிற்காக மட்டுமே இவரை அணியில் சேர்த்துக்கொண்டது ஆஸி.
கப்தில் - 186 ரன்கள்
அடேய் கப்தில் என பல்வேறு வீரர்களும் இவரை கலாய்த்து வருகின்றனர். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற டயாலக்கிற்கு எடுத்தாக்காட்டானார் கப்தில். 2015 உலகக்கோப்பையில் இரட்டை சதம் என 547 ரன்கள் அடித்து, அந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என காலரை தூக்கிக்கொண்ட கப்தில், இம்முறை பந்துவீச்சாளர்களால் கப்சிப் ஆக்கப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்துவிட்டு மற்ற போட்டிகளில் பெவிலியன் திரும்பவதிலேயே கவனமாக இருந்தார் இந்த ‘மானமிகு பிளேயர்’!
இவரது பேட்டின் மூலம் பவுண்டரிகள் பறக்கவில்லை என்றாலும், இவரது கைகளின் மூலம் எதிரணியின் பல பவுண்ட்ரிகளை ஃபீல்டிங்கில் தடுத்தார். குறிப்பாக, இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனியை டைரக்ட் த்ரோ அடித்து நியூசிலாந்து அணியை வெற்றிபெறச் செய்தார். போனால் போகட்டும் போடா..!
ரஸல் - 36 ரன்கள், 4 விக்கெட்
ஐபிஎல் தொடரில் பல பந்துகளை சிக்சர் அடித்து தொலைத்த இவர், உலகக்கோப்பையில் தன்னைத் தானே தொலைத்துவிட்டார் என்கின்றனர் இவரின் விசிறிகள். மூன்று போட்டிகளில் விளையாடி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தார் இந்த அதிரடி புயல் ரஸல். பவுலிங்கில் இவர் கைப்பற்றியது நான்கு விக்கெட்டுகள்தான். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக இவரது அதிரடி புயலும் வெஸ்ட் இண்டீஸ் கரைக்கு ஒதுங்கியதுதான் மிச்சம்.
ஃபகர் சமான்- 186 ரன்கள்
2017 சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை பாகிஸ்தான் அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஃபகர், உலகக் கோப்பையில் அவரது பேட்டிங் பற்றி நினைவு கூற முடியவில்லை. க்ரீஸில் இருந்தாதன பாஸ் நியாபகம் வெச்சுக்க முடியும். உலகக் கோப்பையில் இவர் க்ரீஸுக்கு வந்ததும், பெவிலியனுக்கு போனதும் பாகிஸ்தான் வீரர்களுக்கு தெரிந்திருப்பதே கடினம்தான். இந்த சொதப்பல் அணியின் தொடக்க வீரரே ஃபகர் சமான்தான். எட்டு போட்டிகளில் இவர் அடித்தது மொத்தம் 186 ரன்கள் மட்டுமே. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இல்லாமல், சரிவிற்கே இவர் முக்கிய அங்கமாய் திகழ்ந்தார்.
ஜேம்ஸ் வின்ஸ் - 14 ரன்கள்
இங்கிலாந்து வீரர்களும் இவரது பெயரை நிச்சயம் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். ஏன், ரசிகர்களும் இப்படி ஒரு வீரர் இங்கிலாந்து அணியில் இருந்தாரா என்று கேட்பார்கள். பொதுவாக, காலேஜ் அல்லது ஆஃபிஸ் பிராஜக்ட்டில் எந்த வேளையும் செய்யாமல் அணியில் சும்மா இருக்கும் நபர்ளும் கிரெடிட் வாங்கிக்கொள்வார்கள். அதுபோலதான் இவரும் இங்கிலாந்து அணியில் இருந்தார்.
காயம் காரணமாக ஜேசன் ராய் இரண்டு போட்டிகளில் விளையாட ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால், அவருக்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார். இவரது வருகைக்குப் பின்னர் இலங்கை, ஆஸ்திரேலியா என அடுத்தடுத்த போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து அரையிறிதுக்குள் நுழையுமா என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்ததே அதிகம்.