சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து):இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (ஜுன் 20) அரைமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இந்திய கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 29 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர்.
கோலிக்கு பின் அணியே காலி
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கோலி 44 ரன்களிலும், பந்த் 4 ரன்களிலும் ஜேமீசனிடம் வீழ்ந்தனர். இதன்பின்னர், நிலைத்து நின்று ஆடிவந்த ரஹானே 49 ரன்களிலும், அஸ்வின் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
உணவுக்குப் பின்னர் இடைவேளை
உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டபோது, இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்திருந்தது.
இடைவேளைக்கு பின்னர் ஜடேஜா 15 ரன்களிலும், இஷாந்த் 2 ரன்களிலும் இரண்டாவது செஷனை தொடங்கினர். ஆனால், ஆட்டம் ஆரம்பித்த இரண்டாவது ஓவரை ஜேமீசன் வீச வந்தார்.
அந்த ஓவரின் நான்காவது பந்தில் இஷாந்த் சர்மாவையும், ஐந்தாம் பந்தில் பும்ராவையும் வீழ்த்தினார். போல்ட் வீசிய அடுத்த ஓவரில் ஜடேஜா 15 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவர்களை விளையாடி 217 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், கோலி 44 ரன்களும் சேர்த்துள்ளனர்.
நியூசிலாந்து அணியில் ஜேமீசன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரின் ஐந்தாவது ஐந்து-விக்கெட் ஹால் என்பது குறிப்பிடத்தக்கது