உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது. அதன்பிறகு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்க அணிகளுடனான தொடர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் உலகக்கோப்பைத் தொடருடன் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என பலர் கருத்து தெரிவித்துவந்தனர். அத்துடன் முன்னாள் வீரர்கள் சிலர் தோனி தனது ஓய்வு குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்த யுவராஜ் சிங், தோனியின் ஓய்வு குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தோனி இந்திய அணிக்காக பல சாதனைகளைப் படைத்தவர். இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன்களில் இடம்பிடித்தவர், அவர் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் தோனியுடன் யுவராஜ் சிங் மேலும் தோனியுடன் ரிஷப் பந்த்தை ஒப்பிடுவதை நிறுத்துங்கள். தோனி ஒன்றும் உடனே இந்த இடத்தைப் பிடிக்கவில்லை. அவர் இந்த உயரத்திற்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இன்னும் டி20 உலகக்கோப்பைக்கு ஓராண்டு உள்ளது. அதனால் அவருக்கு நெருக்கடிக் கொடுப்பது மிகவும் தவறு. இதனைப் பயிற்சியாளரும் அணியின் கேப்டனும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது யுவராஜ் சிங்கின் இந்தக் கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையிலும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.