இங்கிலாந்து அணியின் 44 வருட கனவை நனவாக்கியவர், அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். நியூசிலாந்துடனான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், அவர் தனி ஒருவராக நின்று போராடி போட்டியை டையில் முடித்தார்.
98 பந்துகளில் ஐந்து பவுண்ட்ரி, இரண்டு சிக்சர் என 84 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதில், சிறப்பம்சம் என்னவென்றால் அவர் நியூசிலாந்தை பூர்விகமாக கொண்டவர்.
தனது 12ஆவது வயதில் இருந்து இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய அவர், தற்போது அந்த அணியின் அடையாளமாக இருக்கிறார். அதேசமயம் அவரது பெற்றோர்கள் நியூசிலாந்தில்தான் வசித்துவருகின்றனர். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஹீரோவாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ், சிறந்த நியூசிலாந்து குடிமகன் என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், "சிறந்த நியூசிலாந்து குடிமகன் என்ற விருதுக்கு என் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதற்கு எனக்கு புகழ்ச்சியாக உள்ளது. நான் நியூசிலாந்தை சேர்ந்த குடிமகனாக இருப்பதில் பெருமையாக இருந்தாலும், நான் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடி அந்த அணி உலகக்கோப்பையை வெல்ல உதவியுள்ளேன். என் வாழ்க்கை இங்கிலாந்தில் நிறுவப்பட்டுள்ளது.
இதனால், இந்த விருதுக்கு நான் ஏற்ற வீரர் இல்லை. என்னைவிட இந்த விருதுக்கு தகுதியானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக, நியூசிலாந்து அணியை தனது சிறப்பான கேப்டன்ஷிப் மூலம் இறுதிப் போட்டிவரை வழிநடத்திய கேன் வில்லியம்சன்தான் இந்த விருதுக்கு ஏற்ற வீரர். அவர் கிவிக்களின் லெஜெண்ட். இந்த விருதுக்காக ஒட்டுமொத்த நியூசிலாந்து மக்களும் அவருக்கு ஆதரவு தர வேண்டும்" என்றார்.
உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருதை நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.