12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை கோலாகலமாக இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், நேற்று இந்தியா, வங்காளதேச அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்யச் சென்ற இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவான் ஒரு ரன்னிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினர்.
இதன்பின், களமிறங்கிய கோலி நிதானமாக விளையாடி 47 (46 பந்துகள்) எடுத்தார். ஆனால் விஜய் சங்கர் இரண்டு ரன்களுடன் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். பின்னர் லோகேஸ் ராகுல் 108 (99), டோனியின் 113 (78) அபார ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி 49.5 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதையடுத்து, 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்திய தரப்பில் சாஹல், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளையும், பும்ரா இரண்டுவிக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.