இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை ஆஸ்திரேலிய அணி மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், மீதுள்ளமுள்ள அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில், இன்று மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறும் போட்டியில், இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரையில் தொடரின் முதல் போட்டியில் இருந்தே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணி இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில், 4-இல் வெற்றி, ஒன்றில் முடிவில்லை என 9 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடித்துவருகிறது. இந்திய தொடக்க வீரர் தவான் காயம் காரணமாக தொடரை விட்டு வெளியேறியது அணிக்கு பின்னடைவாக அமைந்தாலும், கோலி, ரோஹித், விஜய் சங்கர், பாண்டியா, பூம்ரா உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால், இந்திய அணி நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத அணி என்ற பெயருடன் வலம் வருகிறது.
இந்த சூழலில் கடைசியாக ஆடிய போட்டியில், இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் அதிர்ச்சியளித்தனர். எனினும் அப்போட்டியில் , புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஷமி சிறப்பாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட் உட்பட நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.