மும்பை: இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இதையடுத்து, கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (டிசம்பர் 3) தொடங்குகிறது.
முதல் செஷன் ரத்து
இந்நிலையில், தொடர் மழை காரணமாக டாஸ் இன்னும் போடவில்லை. மைதானத்தை சோதனைசெய்த போட்டி நடுவர்கள் நண்பகல் 11.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, பகல் 12 மணிக்கு ஆட்டம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனால், இன்றைய ஆட்டத்தின் முதல் செஷன் ரத்துசெய்யப்பட்டு, இன்று மொத்தம் 78 ஓவர்கள் வீச திட்டமிடப்பட்டுள்ளது.
இரு அணிகளின் ஆடும் லெவன் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஜடஜோ, ரஹானே, இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
விராட் ரிட்டன்ஸ்
டி20 தொடரிலும், டெஸ்ட் போட்டியிலும் ஓய்விலிருந்த விராட் கோலி இன்றையப் போட்டியில் களமிறங்க இருக்கிறார். டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர், அவர் விளையாடும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் போட்டியைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும், கடந்த போட்டியில் கேப்டனாகச் செயல்பட்ட ரஹானே, சென்ற போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆகியோர் இன்றையப் போட்டியில் விளையாடாததால், அவர்களுக்குப் பதிலாக ஆடும் லெவனில் இடம்பெறப்போவது யார் என்ற ஆவலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்கு சர்வதேச விருது!